Sunday 17 December 2023

சன்மார்க்கம்-3

 சன்மார்க்கம் என்றால் ஒன்றும் இல்லாதது.  வெட்ட வெளியாக இருப்பது.  ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது சன்மார்க்கம் இல்லை.  சரி வள்ளலார் சன்மார்க்கியா அல்லது சமயவாதியா?  என்று கேட்டால் அவர் சன்மார்க்கி என்றுதான் சொல்ல வேண்டும்.  அவர் சமயவாதி இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.


 ஆதாரங்கள்


 1)  அவர் சமயவாதியை போல் தன்னை வெளிக்காட்டி கொள்ளவில்லை.


2)  சமயவாதிகளை போல் அவர் காவி அணியவில்லை.


3)  சமயவாதிகளை போல் வேஷம் கட்டிக் கொள்ளவில்லை.


4)  சமயவாதிகளை போல் யாருக்கும் தீட்சை கொடுக்கவில்லை.  யாரிடமும் தீட்சை வாங்கவில்லை.


5)  தன்னிடம் சில கஷ்டங்களை சொன்னவர்களுக்கு அந்தக் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு ஜீவகாருண்யத்தையும், தீப வழிபாட்டையும் வலியுறுத்தி அவர்களது கஷ்டத்தை போக்கினார்.  சமயவாதிகளை போல நீ அந்த சேத்திரத்துக்கு போனால் அது சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்கு போனால் இது சரியாகிவிடும், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போய்விடும், அந்த தீர்த்தத்தில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்றெல்லாம் சமயவாதிகளை போல அவர் பிரசங்கம் செய்யவில்லை.


6)  ஆன்ம லாபத்திற்கு வழிகாட்டினாரே தவிர,  சமயவாதிகளை போல ஆதாய லாபத்திற்கு அவர் வழிகாட்டவில்லை.


7)  தான் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு முன் ஒன்றரை வருடமாக கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் பிரசங்கம் செய்து வந்தார்.  ஆன்ம லாபம் பெறுவதற்கு எந்த சமய கடவுளையோ  அல்லது  எந்த ஷேத்திரத்தையோ சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற சொல்லவில்லை.  அதுமட்டுமல்லாமல் எந்த சமயத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.


 இது போல் இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  அது விரிக்கில் பெருகும்.  எனவே வள்ளலார் கூறியது போல் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  அந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்வோம்.


 தில்லை திருமாவளவன்.

Saturday 16 December 2023

சன்மார்க்கம்-2

சன்மார்க்கத்தை வழி நடத்துவதற்கு அடிப்படையாக இருப்பது தயவு.  தயவை எப்படி விருத்தி செய்து கொள்ள முடியும்?  நம்மிடம்  நிறைய பணம் இருக்க வேண்டுமா?  பல பேரை நாடி சென்று பணத்தை வசூல் செய்து தயவு பெற்றுக்கொள்ள வேண்டுமா?  நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வாரி கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாக வேண்டுமா?  இதனாலெல்லாம் தயவு விருத்தி செய்து கொள்ள முடியாது.  பிறகு எப்படி தயவை விருத்தி செய்து கொள்வது?  தயவு விருத்தி செய்து கொள்ள நம்முடைய பாக்கெட்டில் இருந்து அதாவது பணத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.  மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  மனதளவில் இறக்க சுபாவமும்,  எளியோர் படும் வேதனையைக் கண்டு  மனம் பதற்றம் அடைய வேண்டும்.  ஏழை எளிய மக்களை இறைவா நீ காப்பாற்று, என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்தால் தயவு விருத்தி ஆகும். நாம் இப்படி செய்வது சிறிய விளக்கு.  இந்த சிறிய விளக்கை கொண்டு, ஆண்டவனின் தயவாகிய பெரிய விளக்கை ஏற்ற வேண்டும்.  அதாவது ஆண்டவனின் அருள் விளக்கை ஏற்ற வேண்டும்.  இப்படி செய்து கொண்டிருந்தால் நம்முடைய ஆன்மா நெகிழ்ச்சி அடைந்து நல்ல பக்குவ நிலைக்கு வரும்.  அதன்பிறகு ஆண்டவரோடு இணைவதற்கான பக்குவம் நமது உடலில் ஏற்படும்.  இதைத்தான் வள்ளலார் ஆன்ம லாபம் என்று சொல்கின்றார்.  நமது குடும்ப வருமானத்தை சிக்கனம் செய்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார்.  தான் பட்டினி கிடந்து அடுத்தவருடைய பசியை போக்குவது ஜீவகாருண்யம் ஆகாது என்றும் வள்ளலார் கூறியிருக்கின்றார்.  இவற்றையெல்லாம் உணர்ந்து உண்மையான ஜீவகாருண்யம் செய்வோம்.  ஆண்டவரது அருளைப் பெறுவோம்.
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
x

Friday 15 December 2023

சன்மார்க்கம்-1

 இந்த உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கத்திற்கு அடை வைத்திட திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோன்றினார்.  அதே முயற்சியில் நாம் இருந்தால்தான் நாமும் வள்ளலாருக்கு உறவினராகவும் தொண்டர்களாகவும் இருக்க முடியும்.  ஆனால் நம்மில் பலர் சன்மார்க்கத்தை பரப்புகின்றேன் இன்று சொல்லிக்கொண்டு செல்கின்ற இடத்தில் எல்லாம் சமய நெறிகளையும், வேறு பல மார்க்கங்களையும் ஆதரித்து பேசிவிட்டு வருகிறார்கள்.  அதற்கு காரணம் பணம்.  பணவசூலில் ஈடுபட்டிருக்கும் சன்மார்க்கிகள், இடத்திற்கு தகுந்தவாறு பேசினால் தான் நமக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் என்று எதை எதையோ பேசி உளறி விட்டு வருகிறார்கள்.  சன்மார்க்கத்தை சன்மானத்தில் அடகு வைத்து விடுகிறார்கள்.  வள்ளலார் ஆரம்ப காலத்தில் சமயத்தில் இருந்தது போல் தோன்றும்.  ஆனால் ஒரு நாளும் அவர் சமயத்தை ஆதரிக்கவில்லை.  கொலை, புலை ஆகியவை இந்த உலகத்திலே ஒரு சமயத்தில் ( பேர் மட்டும் சைவ சமயம் ) அதிகமாக இருந்தது.  அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே அவர் சமயத்தில் இருப்பது போல் தோற்றத்தை காட்டினார்.  இந்த சமயத்தையும் வள்ளலார் ஆதரிக்கவில்லை என்பதற்கு அவர் எழுதிய திருவருட்பாவிலே நிறைய சான்றுகள் உள்ளன.  அரை நிமிடத்தில் ஆயிரம் பணக்காரர்களை என்னால் அது அதிட்டிக்க (உருவாக்க ) முடியும் என்று வள்ளலார் கூறுகின்றார். அப்படி இருக்கும் பொழுது அவர் மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தில் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து சன்மார்க்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அவரிடம் கேட்டால் கேட்டதை விட அதிகம் கொடுப்பார், என்பதை யாரும் உணரவில்லை.

 எல்லாம் செயல் கூடும். என் ஆணை. அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

 தில்லை திருமாவளவன்
9840348094