Sunday 17 December 2023

சன்மார்க்கம்-3

 சன்மார்க்கம் என்றால் ஒன்றும் இல்லாதது.  வெட்ட வெளியாக இருப்பது.  ஏதாவது ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது சன்மார்க்கம் இல்லை.  சரி வள்ளலார் சன்மார்க்கியா அல்லது சமயவாதியா?  என்று கேட்டால் அவர் சன்மார்க்கி என்றுதான் சொல்ல வேண்டும்.  அவர் சமயவாதி இல்லை என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.


 ஆதாரங்கள்


 1)  அவர் சமயவாதியை போல் தன்னை வெளிக்காட்டி கொள்ளவில்லை.


2)  சமயவாதிகளை போல் அவர் காவி அணியவில்லை.


3)  சமயவாதிகளை போல் வேஷம் கட்டிக் கொள்ளவில்லை.


4)  சமயவாதிகளை போல் யாருக்கும் தீட்சை கொடுக்கவில்லை.  யாரிடமும் தீட்சை வாங்கவில்லை.


5)  தன்னிடம் சில கஷ்டங்களை சொன்னவர்களுக்கு அந்தக் கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு ஜீவகாருண்யத்தையும், தீப வழிபாட்டையும் வலியுறுத்தி அவர்களது கஷ்டத்தை போக்கினார்.  சமயவாதிகளை போல நீ அந்த சேத்திரத்துக்கு போனால் அது சரியாகிவிடும், இந்தக் கோயிலுக்கு போனால் இது சரியாகிவிடும், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் போய்விடும், அந்த தீர்த்தத்தில் நீராடினால் புண்ணியம் பெருகும் என்றெல்லாம் சமயவாதிகளை போல அவர் பிரசங்கம் செய்யவில்லை.


6)  ஆன்ம லாபத்திற்கு வழிகாட்டினாரே தவிர,  சமயவாதிகளை போல ஆதாய லாபத்திற்கு அவர் வழிகாட்டவில்லை.


7)  தான் இறைவனுடன் ஐக்கியமாவதற்கு முன் ஒன்றரை வருடமாக கடவுள் ஒருவரே என்றும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் பிரசங்கம் செய்து வந்தார்.  ஆன்ம லாபம் பெறுவதற்கு எந்த சமய கடவுளையோ  அல்லது  எந்த ஷேத்திரத்தையோ சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற சொல்லவில்லை.  அதுமட்டுமல்லாமல் எந்த சமயத்தையும் அவர் ஆதரிக்கவில்லை.


 இது போல் இன்னும் பல ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  அது விரிக்கில் பெருகும்.  எனவே வள்ளலார் கூறியது போல் நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு,  அந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி கொள்வோம்.


 தில்லை திருமாவளவன்.

Saturday 16 December 2023

சன்மார்க்கம்-2

சன்மார்க்கத்தை வழி நடத்துவதற்கு அடிப்படையாக இருப்பது தயவு.  தயவை எப்படி விருத்தி செய்து கொள்ள முடியும்?  நம்மிடம்  நிறைய பணம் இருக்க வேண்டுமா?  பல பேரை நாடி சென்று பணத்தை வசூல் செய்து தயவு பெற்றுக்கொள்ள வேண்டுமா?  நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வாரி கொடுத்துவிட்டு ஓட்டாண்டியாக வேண்டுமா?  இதனாலெல்லாம் தயவு விருத்தி செய்து கொள்ள முடியாது.  பிறகு எப்படி தயவை விருத்தி செய்து கொள்வது?  தயவு விருத்தி செய்து கொள்ள நம்முடைய பாக்கெட்டில் இருந்து அதாவது பணத்திலிருந்து ஆரம்பிக்கக் கூடாது.  மனதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  மனதளவில் இறக்க சுபாவமும்,  எளியோர் படும் வேதனையைக் கண்டு  மனம் பதற்றம் அடைய வேண்டும்.  ஏழை எளிய மக்களை இறைவா நீ காப்பாற்று, என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்தால் தயவு விருத்தி ஆகும். நாம் இப்படி செய்வது சிறிய விளக்கு.  இந்த சிறிய விளக்கை கொண்டு, ஆண்டவனின் தயவாகிய பெரிய விளக்கை ஏற்ற வேண்டும்.  அதாவது ஆண்டவனின் அருள் விளக்கை ஏற்ற வேண்டும்.  இப்படி செய்து கொண்டிருந்தால் நம்முடைய ஆன்மா நெகிழ்ச்சி அடைந்து நல்ல பக்குவ நிலைக்கு வரும்.  அதன்பிறகு ஆண்டவரோடு இணைவதற்கான பக்குவம் நமது உடலில் ஏற்படும்.  இதைத்தான் வள்ளலார் ஆன்ம லாபம் என்று சொல்கின்றார்.  நமது குடும்ப வருமானத்தை சிக்கனம் செய்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார்.  தான் பட்டினி கிடந்து அடுத்தவருடைய பசியை போக்குவது ஜீவகாருண்யம் ஆகாது என்றும் வள்ளலார் கூறியிருக்கின்றார்.  இவற்றையெல்லாம் உணர்ந்து உண்மையான ஜீவகாருண்யம் செய்வோம்.  ஆண்டவரது அருளைப் பெறுவோம்.
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
x

Friday 15 December 2023

சன்மார்க்கம்-1

 இந்த உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கத்திற்கு அடை வைத்திட திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோன்றினார்.  அதே முயற்சியில் நாம் இருந்தால்தான் நாமும் வள்ளலாருக்கு உறவினராகவும் தொண்டர்களாகவும் இருக்க முடியும்.  ஆனால் நம்மில் பலர் சன்மார்க்கத்தை பரப்புகின்றேன் இன்று சொல்லிக்கொண்டு செல்கின்ற இடத்தில் எல்லாம் சமய நெறிகளையும், வேறு பல மார்க்கங்களையும் ஆதரித்து பேசிவிட்டு வருகிறார்கள்.  அதற்கு காரணம் பணம்.  பணவசூலில் ஈடுபட்டிருக்கும் சன்மார்க்கிகள், இடத்திற்கு தகுந்தவாறு பேசினால் தான் நமக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் என்று எதை எதையோ பேசி உளறி விட்டு வருகிறார்கள்.  சன்மார்க்கத்தை சன்மானத்தில் அடகு வைத்து விடுகிறார்கள்.  வள்ளலார் ஆரம்ப காலத்தில் சமயத்தில் இருந்தது போல் தோன்றும்.  ஆனால் ஒரு நாளும் அவர் சமயத்தை ஆதரிக்கவில்லை.  கொலை, புலை ஆகியவை இந்த உலகத்திலே ஒரு சமயத்தில் ( பேர் மட்டும் சைவ சமயம் ) அதிகமாக இருந்தது.  அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே அவர் சமயத்தில் இருப்பது போல் தோற்றத்தை காட்டினார்.  இந்த சமயத்தையும் வள்ளலார் ஆதரிக்கவில்லை என்பதற்கு அவர் எழுதிய திருவருட்பாவிலே நிறைய சான்றுகள் உள்ளன.  அரை நிமிடத்தில் ஆயிரம் பணக்காரர்களை என்னால் அது அதிட்டிக்க (உருவாக்க ) முடியும் என்று வள்ளலார் கூறுகின்றார். அப்படி இருக்கும் பொழுது அவர் மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தில் மேல் மட்டும் நம்பிக்கை வைத்து சன்மார்க்கிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  அவரிடம் கேட்டால் கேட்டதை விட அதிகம் கொடுப்பார், என்பதை யாரும் உணரவில்லை.

 எல்லாம் செயல் கூடும். என் ஆணை. அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

 தில்லை திருமாவளவன்
9840348094

Sunday 18 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 17

நல்ல மருந்திம் மருந்து 





 நல்ல மருந்திம் மருந்து.  ஆம்.  இம் என்பதுதான் மருந்து.   

 உடல்நிலை மோசமடைந்த ஒரு நோயாளியை நன்கு கவனித்தால் அவருடைய தொண்டையிலிருந்து ஒரு சப்தம் வருவதை கவனிக்கலாம்.  அது இம் இம் என்று முனகுவது ஆக இருக்கும்.  அவருடைய உடம்பு இயற்கையாக மருந்தைத் தேடி அவ்வாறு முனக செய்கிறது.  உடம்பு நன்றாக இருக்கும் பொழுதே இந்த மந்திரத்தை அவ்வப்பொழுது உச்சரித்து வந்திருந்தால்  அவருடைய உடல்நிலை மோசமடைந்து இருக்காது.  வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்பது திருவள்ளுவர் வாக்கு.   குறிப்பாக ம் என்று முடியக்கூடிய வார்த்தைகள் எல்லாம் ஒரு மருந்தாகவே இருக்கும்.

 வேலை சொன்ன வழியில் இரண்டு வார்த்தைகள் ம் என்று முடிகிறது.  ஒன்று எல்லாம்.  மற்றொன்று இருக்கும்.  பல்லாயிரக்கணக்கான மந்திர வார்த்தைகளை வள்ளலார் திருவருட்பாவில் கையாண்டுள்ளார்.  அவற்றில் சில,
 அருட்சிவ பதியாம், ஈனம் இன்று, உரை மனம், ஓங்கும், ஊக்கமும், உணர்ச்சியும், ஒளிதரும், ஆக்கையும், ஆக்கமும், பிறப்பெனும், ஐயமும், திரிபும், இவை விரிக்கின் பெருகும்.

 நல்ல மருந்து மருந்து சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து.  இந்த மருந்தை நாதமாக குறிப்பிடுகின்றார்.  நாதம் என்பது சப்தம் என பொருள்படும்.  உடலை நிச்சய உடலாக மாற்றுவதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன.  அவை மணி மந்திரம் அவுஷதம்.  இவை மூன்றுமே மருந்துகள் தான்.  முதலாவதாக உள்ள மணி என்பது மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள மகான்களால் உங்களுடைய உடலில் உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய விஷயம்.  இதற்கு மிக உயர்ந்த ஒழுக்க நெறியில் நின்றால் உனது உடலில் இருக்கக்கூடிய விந்தானது மணியாக மாறிவிடும்.   அடுத்ததாக மந்திரம்.   திரு தான் வள்ளலார் குறிப்பிட்டுள்ள நாத மருந்து.  மந்திரத்தை உச்சரிக்கும் போது சப்தம் உண்டாகும்.  இந்த மந்திரத்தை ஓத ஓத நமது உடலில் ஒரு உணர்வுநிலை vibration ஏற்பட்டு அது மருந்தாக செயல்பட ஆரம்பிக்கும்.  முதலில் நமது உடம்பில் ஏற்படக்கூடிய பிணிகளை இந்த மருந்தினால் நாம் எடுத்துக்கொள்ள முடியும்.  நாளடைவில் இந்த பயிற்சியை மேற்கொண்டு வந்தால் பிணியால் பாதிக்கப்பட்ட மற்ற மனிதர்களின் துன்பத்தையும் நம்மால் போக்க முடியும்.  அதுதான் முடிவான சன்மார்க்க சுகம்.

 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்கின்றார் வள்ளலார்.

 இன்றைக்கும் கைக்குழந்தைகளுக்கு ஏதாவது கண்டுபிடிக்கமுடியாத பிணி பயம் ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்கு எல்லா மதத்தைச் சேர்ந்த தாய்மார்களும் குழந்தைகளை எடுத்துக்கொண்டு முகமதியர்களின் கோரி வாசலில் நிற்பார்கள்.  அங்கே அல்லாஹ் ஓதும் பெரியவர்கள் குழந்தைகளை தங்கள் வாயால் ஊதி மந்திரம் ஜெபிப்பார்கள்.  இந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளின் பிணி பயம் நீங்கிவிடும்.  இது நடைமுறை உண்மை.  இதுவும் ஒரு நாத மந்திரம்தான். 

 மேற்சொல்லப்பட்ட மணி மற்றும் மந்திரம் இவற்றை கையாள முடியாதவர்கள் அவ்ஷிதம் என்று சொல்லக்கூடிய மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதாவது மூலிகை மாத்திரை கஷாயம் லேகியம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 நல்ல மருந்து என்று சமயத்தில் இருந்த போது வள்ளலார் பாடினார்.  அவரே சமயத்தை விட்டு சுத்த சன்மார்க்கத்திற்கு வந்தபிறகு,
 ஞான மருந்திம் மருந்து சுகம் நல்கிய சிற்சபாநாத மருந்து.

 முதலில்நல்கும் என்று எதிர்காலத்தில்  சொன்னவர், பின்னர் நல்கிய என்று இறந்த காலத்தில் கூறுகின்றார்.  இரண்டிலும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இரண்டு மந்திரமும் நாத மந்திரம் தான்.

 வாழ்க வாழ்க நாதனே.

 


அருட்பெருஞ்ஜோதி


-- தில்லை திருமாவளவன்













Saturday 17 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 16

16ம் பெற்ற பெருவாழ்வு 





 இது கட்டுரை எண்  பதினாறு.  பதினாறு என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் எண் என்றால் என்ன எழுத்து என்றால் என்ன என்பதைப் பற்றி சிறிய விளக்கத்தை பார்ப்போம்.  எண் என்பது கடவுள் எழுத்து என்பது மனித உடல்.  இது திருமந்திர முதல் பாடல் தொடங்கி அருட்பெருஞ்ஜோதி அகவல் வரை கூன்றி படித்தவர்களுக்கு மிக நன்கு விளங்கும்.  இதற்கான விளக்கத்தை நாம் முழுமையாக வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.  தற்பொழுது 16க்கு வருவோம்.  சன்மார்க்கத்தில் 16ஆம் நிலையை நாம் அடைந்தால் பரிபூரண நிலையை அடைந்து விட்டதாக அர்த்தம்.  நமக்கு பதினாறு பேறுகள் தேவையில்லை.  நமக்கு தேவை 16ஆம் நிலை.  திருவருட்பாவில் வள்ளலார் இதனை பல பாடல்களில் வலியுறுத்தி உள்ளார்.  இப்பொழுது பதினாறாம் நிலையை பார்ப்பதற்கு முன் சந்திரனின் நிலையை, அதன் கலையை பற்றி  நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

 சந்திரன் என்பது மதி.
 மதி என்பது அறிவு.
 அறிவு என்பது ஞானம்.
 பூரணச்சந்திரன் பூரண ஞானம்.

 ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே
என்னை நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே  -- இதுவே வள்ளலார் பாட்டு.  சந்திரனை வைத்துத்தான் நாம் இந்த 16ஆவது நிலையைப் பற்றி அறிந்து தெரிந்து மேலே ஏற முடியும்.  சரி வரிசையாக பார்ப்போம்.
1) முதல் நிலை - அமாவாசை - சரியையில் சரியை -- ஞான சூனியம் -  இறைவனை சிலைவடிவில் பக்தியோடு வணங்கி பண்டாரமாய் திரிவது.
2) இரண்டாம் நிலை -- பிரதமை -- சரியையில் கிரியை
3) மூன்றாம் நிலை  -- துவிதியை -- சரியையில் யோகம்
4) நான்காம் நிலை -- திருதியை -- சரியையில் ஞானம்
5) ஐந்தாம் நிலை -- சதுர்த்தி -- கிரியையில் சரியை
6) ஆறாம் நிலை  -- பஞ்சமி -- கிரியையில் கிரியை
7) ஏழாம் நிலை -- சஷ்டி -- கிரியையில் யோகம்
8) எட்டாம் நிலை -- சப்தமி -- கிரியையில் ஞானம்
9) ஒன்பதாம் நிலை -- அஷ்டமி -- யோகத்தில் சரியை
10) பத்தாம் நிலை -- நவமி -- யோகத்தில் கிரியை
11) பதினொன்றாம் நிலை -- தசமி -- யோகத்தில் யோகம் 
12) பன்னிரெண்டாம் நிலை -- ஏகாதசி -- யோகத்தில் ஞானம் 
13) பதிமூன்றாம் நிலை -- துவாதசி -- ஞானத்தில் சரியை
14) பதினான்காம் நிலை -- திரையோதசி -- ஞானத்தில் கிரியை
15) பதினைந்தாம் நிலை -- சதுர்த்தசி -- ஞானத்தில் யோகம்
16) பதினாறாம் நிலை -- பவுர்ணமி -- ஞானத்தில் ஞானம்  --  பரிபூரண நிலை.

 இங்கே சிலர் குழம்புவதற்கு வாய்ப்பு உள்ளது.  0 = 1 என ஆரம்பித்தோம்.  15 = 16 என முடித்துள்ளோம்.  எனவே குழம்ப வேண்டாம்.  இது மனித உடலிலும், மனிதரின் மனதிலும், ஒரு சக்கரமாக சுழன்று கொண்டே இருக்கும்.   இப்படி ஏறி ஏறி இறங்கி சுழன்று கொண்டே இருக்காமல் ஞானத்தில் பரிபூரணம் ஆவதே சன்மார்க்கம் . 

 நன்னாலும் (4×4 =16)கடந்தே ஒளிர் ஞான சபாபதியே
 பொன்னாரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே
 என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் என் தாய்
 உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மையை உரைத்து அருளே
-- இது வள்ளலார் பாட்டு.
 
 

 அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.

-- தில்லை திருமா வளவன் 

 கீழேயுள்ள போட்டோவில் மாத பூச   அட்டவணை உள்ளது.  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அடுத்த பூசம்
 3/9/2021 


Thursday 15 July 2021

தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 1

 எல்லாம் செயல் கூடும்

அனைவருக்கும் வணக்கம்.

இந்த தலைப்பை நாம் ஒவ்வொரு சன்மார்க்க கூட்டத்திலும் சொல்கின்றோம்.  ஆனால் இதன்படி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்றே தோன்றுகின்றது.  நம்முடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராலும், வள்ளலாராலும் எல்லாம் முடியும்.  அதற்கு நாம் செய்யவேண்டியது இறைவனை ஏற்றி ( புகழ்ந்து )பாடுவதே.

 ஆனால் நாம் சமய மார்க்கத்தில் பழகிப் பழகி ஆண்டவரை எப்பொழுதும் குறைவாகவே மதிப்பு போட்டு வைத்திருக்கிறோம்.  அவருடைய ஆற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 உதாரணமாக சமீபத்தில் ஒரு சன்மார்க்க சொற்பொழிவைக் கேட்டேன்.  அதில் வள்ளலார் தன்னுடைய சீடராக இருந்த கல்பட்டு ஐயாவுக்கு இருந்த நோயை நீக்காமல் அது தானாகவே நல்வினை செய்ய செய்ய மாறிவிடும் :  இல்லை என்றால் அந்த வினையை தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டும், என்று தன் சீடரிடம் வள்ளலார் சொன்னதாக அந்த சொற்பொழிவில் கூறுகின்றார்.

 இது முழுக்க முழுக்க கற்பனை கலந்த பொய்யான கட்டுக் கதை.   கல்பட்டு ஐயா வுக்கு நோய் இருந்ததற்கான சான்று ஆதாரம் இருக்கிறதா?  அப்படியே இருந்தாலும் அதை நீக்குவதற்கு வள்ளலாரால் முடியாதா??  வினையை வைத்து வள்ளலார் பேரம் பேசுவாரா??? 

 முதலில் சன்மார்க்கிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  சன்மார்க்கத்தில் வினை  என்ற பாடமே கிடையாது.   நல்வினை தீவினை ஆகியவை சன்மார்க்கிகளை தாக்காது. 

 ஊழையும் உட்பக்கம் காண்பர் -  திருவள்ளுவர்.

 முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
 பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் -- திருமூலர்

 செய்தாலும் தீமையெல்லாம் பொருத்தருள்வான் பொதுவில் -- வள்ளலார் 

 கல்பட்டு ஐயாவின் உடைய உடல் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் வள்ளலார் நினைப்பார்.  அதை நீக்காமல் விட்டுவிடுவதற்கு காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்.  வள்ளலார் சர்வ தயாபரன்.  அவரை ஏதோ சாதாரண ஒரு சாமியார் போல சித்தரித்தல் கூடாது.  நீங்கள் கற்பனை கதைகளை செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.  அதில் நேர்மறை எண்ணங்கள் இருத்தல் வேண்டும்.  இது போன்ற எதிர்மறை எண்ணங்கள் இருத்தல் கூடாது.  சன்மார்க்கத்தில் அணு அளவு கூட எதிர்மறை எண்ணம் என்பதே கிடையாது.

 இறைவனின் உண்மையான சொரூப ரூப சுபாவங்களை சிந்தித்துக் கொண்டும் சத்விசாரம் செய்து கொண்டும் இருந்தால், ஒரு கண  நேரத்தில் முத்தேக சித்திகளையும் ஒருவனால் பெற முடியும் என்று வள்ளலார் சொல்கின்றார்.

 எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து.

--  தில்லை திருமாவளவன்


தில்லை  திருமாவின் சன்மார்க்க கட்டுரை 3

 சிந்தனை செய் மனமே

ஆண்டவனைப் பற்றி சிந்தனை செய்வது எப்படி என்பதைப் பற்றிய ஒரு சத் விசாரணை இன்று நாம் பார்ப்போம்.  பற்றுக பற்றற்றான் பற்றினை என்று வள்ளுவரும் வள்ளலாரும் கூறி இருக்கிறார்கள்.  இறைவனுடைய சிந்தனையை நாம் மேற்கொள்ளுவது ஒரு மருந்து உட்கொள்வதற்கு சமமாகும்.  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒரு நபர் சித்தமருத்துவம் மேற்கொள்ளும் பொழுது முதலில் வயிற்றை காலி செய்ய அவருக்கு மருந்து கொடுக்கப்படும்.  அதுபோல நீண்ட நாட்களாக இந்த உலகியல் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாம் இறை சிந்தனை செய்வதற்குமுன் நமது மனதை தூய்மை படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.  இதற்கு முதல் சாதனமாக இருப்பது இறைவனாலேயே எடுத்துக்கொள்ளப்பட்ட மகா மந்திரமாகிய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதுதான்.

 மேலும் நமது மனதை சுத்தி செய்து கொள்வதற்கு ஒரு சிறுகதையின் மூலமாக விளக்குகின்றேன்.  ஒருவர் ஒரு அண்டாவில் காரக்குழம்பும் மற்றொரு அண்டாவில் பழ ரசமும் வைத்திருந்தார்.  அவர் மூன்று நபர்களை அழைத்து அவர்களிடம் ஆளுக்கு ஒரு சிறு பாத்திரத்தை கொடுத்தார்.  அந்தப் பாத்திரத்தில் நீங்கள் எதைவேண்டுமானாலும் நிரப்பி எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறினார்.   ஒருவன் தனது பாத்திரத்தில் காரக்குழம்பை நிரப்பி எடுத்துச் சென்றான்.  மற்றொருவன் தனது பாத்திரத்தில் பழரசத்தை நிரப்பி எடுத்துச் சென்றான்.  மூன்றாவதாக வந்தவன் தனது பாத்திரத்தில் எதையுமே நிரப்பிக்கொள்ளாமல் அப்படியே எடுத்துச் சென்று விட்டான்.
1) காரக்குழம்பை நிரப்பிக் கொண்டவன் பாவி.  அவன் பலவித துஷ்ட செயல்களை செய்பவன்.
2)   பழரசத்தை நிரப்பிக் கொண்டவன் அப்பாவி. நல்லவன்.  இவன் கெட்டது எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பான்.  நல்லதே நடப்பதற்காக போராடுவான்.
3) எதையுமே நிரப்பிக் கொள்ளாமல் காலியாக வைத்திருந்தவன் ஞானி.  இவனுடைய பாத்திரத்தில் வெட்டவெளி இருந்தது.  தூய ஒளியும் இருந்தது.

 இந்த மூன்றாவது மனிதனை போல்  நாம் இருந்தால்தான் இறை சிந்தனையில் ஈடுபட முடியும்.  நமது மனதை காலியாக வைத்துக் கொண்டிருந்தால் தான் அதில் இறைவன் என்கின்ற ஒளியையும் வெளியையும் நாம் காணமுடியும்.

 இந்த நிலையில் செய்யும் இறைவழிபாடு தவம் ஆக இருக்கும்.

 அதனால் தான்,

 சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் என்று மாணிக்கவாசக சித்தர் பாடுகிறார்.

 அந்தி வண்ணா அரனே சிவனே என்று சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ என்று திருமூல சித்தர் பாடுகிறார்.

 சித்தி எலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தையெல்லாம் தவிர்ந்தே என்று ஞானசித்தர் வள்ளலார் பாடுகின்றார்.

 இதுபோல் நிறைய உதாரணங்கள் காட்ட முடியும்.  இந்த நிலையை ஒருவர் பெற்றால்தான் சும்மா இருக்கும் சுகம் கிட்டும். 

 அருட்பெருஞ்ஜோதி வணக்கம்.

 தில்லை திருமாவின் சன்மார்க்க கட்டுரை 4

 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

இறைவன் மீது சதாசர்வகாலமும் அன்பு செலுத்தவேண்டும். அவனை காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 அன்பே சிவம் என்று திருமூல சித்தர்  கூறுகின்றார்.

 ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுது, அவளுடைய முகம் அவன் மனதை விட்டு விலகுவதே இல்லை. அவன் சரியாக  தூங்குவதே இல்லை.   வேளாவேளைக்கு சரியாக சாப்பிட மாட்டான்.  யாரைப் பார்த்தாலும் அவனுக்கு அவன் காதலியை பார்ப்பது போலவே தெரியும்.  யார் அவனிடம் பேசினாலும் அவனுடைய காதலி பேசுவது போலவே அவனுக்கு தோன்றும்.  இந்த நிலையில்தான் நாமும் இறைவனை காதலிக்க வேண்டும்.

 இறைவனை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறுமா ஆதாரத்தில் தான் இச்சை  செல்லுமா  என்றும்,

 அன்புருவாம் பரசிவமே என்றும் ஞான சித்தர் வள்ளலார் கூறியுள்ளார்.

 நிறைய பேர் அன்பு காதல் என்பது சரியை நிலை எனவே அது சன்மார்க்கத்தில் தேவையில்லை என்று கூறுவார்கள்.  அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.  இறைவனை காதலிப்பதில் நான்கு வகை உண்டு.

1) சரியை காதல் - இறைவனை சிலா ரூபமாக கருதி காதலிப்பது.
2) கிரியை காதல் - இறைவன் எல்லா அன்பர்களின் மனதில் இருப்பதால் அவர்களுக்கு ஜீவகாருண்யம் செய்து இறைவனை காதலிப்பது.
3) யோக காதல் - இறைவன் அக்னியாக நமது உடலில் காரிய படுகின்றான் என உணர்ந்து அவனை காதலிப்பது.
4) ஞான காதல் - அங்கிங்கெனாதபடி இறைவன் எங்கும் இருக்கின்றான் என்றும், அது இது என உரைபரிதாய் இறைவன் எங்குமாய் விளங்குவதாக எண்ணி காதலிப்பது.

 இதுபோல் அவர்கள் அவர்கள் நிலையில் இருந்து இறைவனை காதலிக்க வேண்டும்.

 நமச்சிவாய என்ற ரகசிய வார்த்தையை விளக்க வந்த திருஞானசம்பந்த சித்தர், காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது என்று விளக்குகின்றார்.

 இறைவனை காதலித்துதான் நான் மென்மையான நிலையை அடைந்தேன் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தவர் திருமூல சித்தர்.
 மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
 விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
 பண்ணகத்தின்னிசை பாடல் உற்றானுக்கே
 கண்ணகத் தேநின்று காதலித் தேனே

 நமது ஞானசித்தர் வள்ளல்பெருமான் இறைவன் மீது நமது ஆசையை தூண்டி அழைக்கின்றார்.
 அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே
 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே நேச முடையீரே
 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
 அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

 இறைவனை காதலிப்போம் இகபர இன்பத்தை முழுமையாக அடைவோம். அருட்பெருஞ்ஜோதி.

 கட்டுரை 5

 அண்ட பிண்ட விசாரம்

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் நமக்கு இட்ட கடைசி கட்டளைகளில் ஒன்று அண்ட பிண்ட விசாரம் செய்வது. அண்ட பிண்ட விசாரம் செய்வதற்கு முதலில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இந்த அண்டத்தில் உள்ளதெல்லாம் இந்த பிண்டத்திலும் இருக்கின்றது என்பதுதான்.  இந்த ஒரு சின்ன விஷயத்திலேயே வள்ளலார் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.  ஆம்.  இந்த அண்டத்தில் உள்ள இறைவனும் நமது பிண்டத்தில் ( உடம்பில் ) உள்ளான். நமது உடம்பானது பிண்டம்.  இந்த உடம்பை விட்டு வியாபகமாய் உள்ளது அண்டம்.  நமது உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரைக்கும் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றும் 96 தத்துவங்கள் ஆகும்.  இது நமது ஒவ்வொருவரின் ஆட்காட்டி விரல் அளவில் உள்ள 96 அங்குலங்கள் ஆக இருக்கும்.

 எங்குலம் எம்மினம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

 நமக்கு கொடுக்கப்பட்ட இந்த இந்த உடம்பு தான் நமக்கு குலமும் இனமும் ஆக இருக்கும்.  இதை விட்டு வெளியிலே நமது குலத்தையும் நமது இனத்தையும் தேடுவது அறியாமை. 

 இந்த அண்டத்தில் உள்ள காற்று, ஆகாயம், அக்கினி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இறைவன் இவை யாவுமே நம் உடலில் இருக்கின்றது.  இவை எங்கே இருக்கின்றது எப்படி இருக்கின்றது என்று உடலில் பொருத்திப் பார்த்து பழக வேண்டும்.  இதுவே அண்ட பிண்ட விசாரம்.  இந்த விசாரணையை நம்முடைய அறிவுக்கு தக்க மனிதர்கள் உடனேயோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.

 சமய மார்க்கத்தில் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கண்ணனுடைய லீலைகளை சொல்லும்போது கண்ணன் சிறுவயதில் மண்ணை தின்றதாகவும் அவனுடைய தாய் அவனை அதட்டி, வாயை திற என்று கூறும் பொழுது அந்த வாய்க்குள்ளே உலகம் முழுவதும் தெரிந்ததாகவும் அந்த உலகத்தில் இந்த தாயும் அந்த கண்ணனும் அங்கே இருந்ததாகவும் கூறுவர். இப்படியாக வாய்க்குள்ளே உலகமும் உலகத்துக்கு உள்ளே கண்ணனும் அந்தக் கண்ணனின் வாய்க்குள்ளே உலகமும் என்று முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதைத்தான் வள்ளலார்,


 உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே

 மேலும்,

 ஜோதியுள் ஜோதியுள் ஜோதி என்றும் கூறியுள்ளார்.

 இவ்வாறு நாம் விசாரம் செய்து கொண்டே வந்தால் நம்முடைய உடலின் அருமை நமக்கு புரியவரும்.  இந்த உடலானது விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.  அதனால் தான் உடலை பொன்போல் பாதுகாக்க வேண்டும் என்று வள்ளலார் அடிக்கடி கூறுவார்.  மேலும் இது தொடர்பான விரிவான விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.

 கட்டுரை 6

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் உரைநடையில் 96 தத்துவங்களை விளக்கும் பொழுது கீழ்கண்டவாறு நமக்கு தெரிவிக்கின்றார்.

 நாயன்மார்கள்      63
 ஆழ்வார்கள்           12
 சமயங்கள்              20
 சிவம்                          1

 ஆக மொத்தம்       96.

 மேற்சொன்ன 20 சமயங்களில் சைவம் வைணவம் சமணம் பௌத்தம் கிறிஸ்தவம் மகமதியம்  உட்பட்டது என கூறுகின்றார்.

 மேலும் ஓரிடத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஒரு விஷயத்தை எடுத்துக் கூறி இது பற்றி எமக்கு தெரியும் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்த அனைத்து சமயங்களின் தத்துவ விவகாரங்களை குழுமத்தால் அறிக என்று குறிப்பிட்டுள்ளார்.

 வள்ளலார் நமது தலை உச்சியில் ஒரு சத்து இருப்பதாகவும் அதைக் காத்துக் கொள்வதற்காக உச்சந்தலையை எப்பொழுதும் மூடி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  முகமதிய சமயத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் உச்சந்தலையை மூடி முக்காடிட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.

 முகமதியர்களின் கடவுள் அல்லா என்பது.   கிறிஸ்தவத்தில் ஏசுநாதருக்கு முன்னே சொன்ன பெயர் எலியா என்ற தீர்க்கதரிசி ஆவார்.  வள்ளலார் எல்லாம் செயல் கூடும் என்று எல்லாம் என்ற வார்த்தையை அடிக்கடி கூறுவார்.  அல்லா, எல்லா(ம்), எலியா இவைகளெல்லாம் ஒரு மந்திரச் சொற்கள்.

 தமிழ்நாட்டில் முகமதிய மதத்தைச் சேர்ந்த ஞானிகள் பலர் இருந்தனர்.  அவர்கள் குறிப்பிடத்தக்க சொல்ல வேண்டியவர்கள் தக்கலை பெரியப்பா, பீர் முகமது,  குணங்குடி மஸ்தான் சாயபு ஆகியவர்கள்.  இதில் குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் ராமநாதபுரம் தொண்டி என்ற ஊரில் வசித்து வந்தவர்.  அவர் அங்கே இருந்து சென்னையில் ஒரு பகுதியில் வந்து தங்கி இருந்தார்.   டெல்லியில் இருந்து அவர் வந்து இங்கேயே தங்கி இருந்த இடத்திற்கு பெயர் தொண்டையார்பேட்டை என்று அவர் பெயராலேயே வழங்கியது.  இப்பொழுது தண்டையார்பேட்டை என்று பெயர் மாரி அங்கேயே அவருடைய சமாதியும் உள்ளது.

 ஒரு முஸ்லிம் ஞானி கூறுகிறார்

 பாயாத கொம்பு இரண்டும்  பரிவுடன் இணக்கமானால் ஆயாவும் அவனே ஆவான் அல்லாவும் அவனே ஆவான்.

 முகமதிய மதத்தாலும் சன்மார்க்க த்தாலும் சொல்லப்பட்ட இறைவனைப் பற்றிய முக்கியமான கருத்து என்னவென்றால்  இறைவன் ஈடு இணை அற்றவன்:  இறைவன் ஒப்புமை சொல்ல முடியாதவன் என்பதே.

 கட்டுரை 8

வள்ளலார் இரக்கமே எனது உயிர்.  இரக்கம் என்னிடமிருந்து போய்விட்டால் எனது உயிரும் என்னிடமிருந்து போய்விடும் என்று வள்ளலார் கூறுகின்றார்.

எறும்பு முதல் யானை வரை எல்லா உயிர்களிடத்தும் இறைவன் இருப்பதாக பாவித்து வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றாரர்.

எல்லோரும் இன்புற்று இருக்க
நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்
அறியேன் பராபரமே   -- தாயுமானவர் 

இந்திரிய ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆகிய இரண்டு ஒழுக்கங்களை வெற்றிகரமாக கடந்தால் தான் இந்த நிலையை அடைய முடியும்.

 இரக்கமாக இருக்கிறேன் என்பதற்காக நம்மிடமுள்ள பணத்தை எல்லாம் கொடுத்து விட்டு நாம் சும்மா இருக்க வேண்டும் கஷ்டப்பட வேண்டும் என்பது அர்த்தம் அல்ல,  இதனுடைய பொருள் சக்திக்கு முடிந்த அளவு சிக்கனமாக இருந்து ஜீவகாருண்யம் செய்ய வேண்டும் என்று வள்ளலார் கூறுகின்றார்.

 மனதளவில் இரக்கத்தோடும் உருக்கத்தோடும்  இருந்தாலே பெரிய விஷயம்.

 இரக்கம் என்பது ஒரு பள்ளம் போன்றது.   பள்ளத்தை நோக்கித்தான் நீர் பாயும்.  அதுபோல இரக்கமுள்ள மனத்தை நோக்கித்தான் இறைவன் அருள்மழை பாயும்.

நாம் உயிர்களிடத்து இரக்கம் காட்டினால் தான் இறைவன் நம்மிடத்தில் இரக்கம் காட்டுவான்.  இறைவன் கருணையே வடிவானவன்.  மனிதனும் அந்த கருணை வடிவமாக மாறும்போது அவன் கடவுள் வடிவமாக மாறுகின்றான்.

அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று கூறுகின்றார்.  மேலும் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று கூறுகின்றார்.     மற்ற வழியில் கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு அறிவு விளக்கம் இல்லை என்பது இதன் பொருள்.

எத்துணையும் பேதமிலாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யார்? என வள்ளலார் கேட்கின்றார்.

தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை   என்றும்

கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலே   என்றும்  இறைவனைப் பார்த்து வள்ளலார் பாடுகின்றார்.

 இரக்கமாக இருப்போம் இரக்கத்தை பெறுவோம்.  இதுதான் சிறு நெருப்பை கொண்டு பெரிய தீபத்தை ஏற்றுவது போலாகும். 

Thursday 20 December 2018

அரசு சார்ந்த 5 செய்திகள்





செய்தி 1


 





 செய்தி 2

 





 செய்தி 3






 செய்தி 4

 




 செய்தி 5