Sunday, 9 August 2026

ஜோதி தரிசனம்

 


https://youtu.be/y9nD4ucnkAw?si=p49PRWWbtmbjfzEn


  • ஜோதி தரிசனம் அல்லது ஜோதி           வழிபாடு(டிசம்பர் மாதம் 2025 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சுத்த சன்மார்க்க மாநாட்டுக்காக நான் எழுதிய கட்டுரை.  கட்டுரை வெளிவரவில்லை.  எனவே பிளாக்கரில் வெளியிடுகிறேன். )
உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடைவித்திட வள்ளலார் கண்ட எளிய வழிமுறைதான் ஜோதி தரிசனம் அல்லது ஜோதி வழிபாடு.  சுப்ரமணியம் என்ற கட்டுரையில் வள்ளலார் மனிதர்களை நான்கு வகையாக பிரிப்பார். 
1) பக்தி காண்டி 
2) கர்ம கண்டி 
3) யோகிகள் 
4) ஞானியர். 

இதில் கீழ் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் கடவுளை சிலா ரூபத்தில் தரிசிப்பார்கள்.  இரண்டாவது நிலையில் உள்ள கர்ம காண்டிகள் கடவுளை தீப வடிவில் தரிசிப்பார்கள்.  மூன்றாவது நிலையில் உள்ள யோகிகள் கடவுளை தங்களுக்குள்ளேயே தரிசிப்பார்கள்.  நான்காவது நிலையில் உள்ள ஞானிகள் கடவுளை எங்கும் தரிசிப்பார்கள்.  இதில் முதல் நிலையில் உள்ள பக்தி காண்டிகள் சமயவாதிகள் ஆவர்.  இவர்கள் இரண்டாவது நிலைக்கு வரும்போது அதாவது தீப தரிசனம் செய்யும்பொழுது தான் சன்மார்க்க நிலையை அடைகிறார்கள்.  கீழ் நிலையில் இருந்த நம்மை இரண்டாவது நிலைக்கு எடுத்துச் சென்று சன்மார்க்கத்தை அறிமுகப்படுத்தியவர் தான் வள்ளலார்.  அதற்குப் பிறகு மூன்றாவது நிலைக்கு நான்காவது நிலைக்கு நாம் செல்வதை கடவுளே பார்த்துக் கொள்வார்.  இந்த நான்கு நிலைகளையும் நான்கு ஒழுக்கங்களோடு நாம் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம்.

வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள், பேருபதேசம், ஞான சரியை ஆகியவைகளை சுத்த சன்மார்க்க விளக்க நூல்களாக எடுத்துக் கொள்ளலாம்.  இவற்றில் ஜோதி வழிபாடு பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது.  இதனைப் படித்து புரிந்து கொண்டவர்கள் ஜோதி வழிபாட்டை புறக்கணித்து வருகிறார்கள்.  இது மிகவும் தவறு. இவர்கள் இதை ஏட்டளவில் படித்து புரிந்து கொண்டவர்களே தவிர உண்மையில் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தவர்கள் இல்லை.  படிப்பு அறிவு என்பது வேறு.  அனுபவ அறிவு என்பது வேறு.  நாம் மூன்றாவது மற்றும் நான்காவது நிலைக்கு வந்தாலும், வள்ளலார் நமக்கு கொடுத்த பாதையான, உலக மக்கள் அனைவரையும் சன்மார்க்க சங்கம் அடை வைத்திட நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஜோதி தரிசனம் மிகவும் அவசியம். 

பஞ்சபூதங்களில் நடுநாயகமாக விளங்குவது தீ ஆகும்.  அதேபோல கருங்குழி, தர்மச்சாலை, மேட்டுக்குப்பம் இவை எல்லாவற்றுக்கும் நடு நாயகமாக இருப்பது ஞானசபை.  ஜோதி தரிசனமே ஞான சபையின் முக்கியத்துவம்.  இந்த ஞான சபையில் ஜோதியனை வந்து வந்து தரிசித்தால், பல மகத்துவங்களையும் அற்புதங்களையும் காணலாம் என வள்ளலார் தெரிவித்துள்ளார். 

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன்.  சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்பது வள்ளலார் வாக்கியம்.  இப்படி அவர் சொல்லும் பொழுது அவர் மூன்றாவது நிலைக்கு வந்துவிட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  அதேபோலவே நாமும் ஜோதியையும் ஞான சபையையும் நம்முள் காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  ஜோதி ஒன்றையே நினைமின், ஒளியை நினைமின், என்று பல பாடல்களில் தெரிவித்துள்ளார்.  வள்ளலார் மேல் நிலையில் நின்று நமக்கு உபதேசம் செய்த பேருபதேசம் என்ற பகுதியில் இறைவன், 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 
என்ற மகா மந்திரத்தை தானே எடுத்துக் கொண்டார் என வள்ளலார் உபதேசித்துள்ளார்.  இங்கே வள்ளலார் அருள் என்பதும் கருணை என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள் என குறிப்பிட்டு மேலே தொடர்வார்.  ஆனால் ஜோதி என்பதை குறிப்பிடாமல் இருப்பார்.  மகா மந்திரத்தை நாம் படிப்பதும் எழுதுவது மட்டும் போதாது . அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனறால் ஒரு விளக்கில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால்தான் முடியும்.

விளக்கை ஏற்றி வழிபாடு செய்ய அது நம்மை வெட்டவெளி வழிபாட்டிற்கு அழைத்துச் செல்லும்.  விளக்கை ஏற்றி வெளியை அறிமின் என்பது திருமூலர் வாக்கு.  வள்ளலார் தான் திருக்காப்பிட்டு கொள்வதற்கு முன் கடைசியாக தன்னுடைய அறையில் இருந்த விளக்கை கொண்டு வந்து வெளியில் வைக்கிறார்.  இந்த தீபத்தின் முன்னிலையில் ஆண்டவன் விளங்குவதாக பாவித்து ஞான சரியை என்ற தலைப்பில் உள்ள 28 பாசுரங்களை பாடி வழிபாடு செய்ய மக்களை கேட்டுக்கொள்கிறார்.  அறைக்குள் இருந்த தீபத்தை அறைக்கு வெளியே கொண்டு வந்து வைக்கிறார் என்பது ஒளி வழிபாடு ஆனது வெளி வழிபாடாக மாறும் என்ற தத்துவத்தை குறிக்க நடந்த ஒரு நிகழ்வு.  தினந்தோறும் தீப வழிபாடு என்பது நம்முடைய முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும்.  தீப வழிபாடு செய்பவர்களைத்தான் மேல்நிலைக்கு வள்ளலார் ஏற்றுவார்.  மக்களை சன்மார்க்கத்திற்கு அழைத்துச் செல்ல வள்ளலார் வைத்திருக்கும் ஒரு வழி இதுதான்.  தீப வழிபாடு ஒரு சத் விசாரமாக அமையும்.  முடியாத  காலங்களில் நாம் பரோபகாரத்தை செய்ய வேண்டும்.  அதாவது ஜீவகாருண்ய வசத்தராய் இருத்தல் வேண்டும்.
-- தில்லை திருமாவளவன் 
9840348094.



.

No comments:

Post a Comment